திண்டுக்கல்:பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்தது. இவ்வாறு பெய்த மழையின் காரணமாக, சாலையோரத்தில் குளங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பழனியை அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தில், ஆறுமுகம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் அவரது உறவினர்கள், உடலை புதைப்பதற்காக வாய்க்கால் கரை ஓரத்திற்கு உடலை எடுத்துச் சென்றனர். மழை காரணமாக அந்த வாய்க்காலில் தண்ணீர் இருந்ததால், இறந்தவரின் உடலை தூக்கிச் சென்றவர்கள் தண்ணீரில் கடந்து சென்று அடக்கம் செய்தனர். மேலும் கணக்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தினர், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தனி சுடுகாடு இல்லாததால் வாய்க்கால் கரை ஓரங்களில் அடக்கம் செய்து வருகின்றனர்.