திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மலை பழங்களான பிளம்ஸ், பிச்சிஸ், பேரிக்காய், அவகோடா உள்ளிட்ட பழங்கள் கொடைக்கானலில் விளைவிக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் அதிக அளவில் பிளம்ஸ், பிச்சிஸ் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். மேலும், கொடைகானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழங்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
வருடம் முழுவதும் காத்திருந்து மே மற்றும் ஜூன் மாதங்களில் இப்பகுதியில் விளைவிக்கப்படும் பிளம்ஸ் மற்றும் பிச்சிஸ் உள்ளிட்ட பழங்கள் எடுக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விளைவிக்கப்பட்ட பிளம்ஸ் மற்றும் பிச்சிஸ் ஆகிய பழங்கள் பல நூறு டன்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.
பிளம்ஸ் பழ இரண்டாவது சீசனாக கருதப்படும், ஜனவரி மாதத்தில் கொடைக்கானல் வடகவுஞ்சி, பேத்துப்பாறை, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிளம்ஸ் பழங்கள் அதிக அளவில் காய்த்தது. இதனால், பிளம்ஸ் பழங்கள் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனையானது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியமானது - அப்துல் ரகுமான் பரபரப்பு பேச்சு!