திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் வடமதுரை ரயில் நிலைய சாலையில், ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி, அவரது ஸ்டுடியோவிற்கு புகைப்படம் எடுக்க வந்துள்ளார்.
அப்போது அந்த மாணவியுடன் அழகர்சாமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அறிந்த மாணவியின் பெற்றோர், மாணவி பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவரை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்துள்ளனர். மேலும் தனது மகளுடனான காதலை கைவிடுமாறு மாணவியின் தந்தை அழகர்சாமியை தொடர்ந்து கண்டித்துள்ளார்.
ஆனாலும், அழகர்சாமி கோயம்புத்தூர் சென்று மாணவியை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். மேலும் மாணவியுடன் தான் எடுத்த புகைப்படத்தை, அவரின் தந்தைக்கு செல்போனில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை இன்று (அக்.27) அழகர்சாமியின் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார்.