திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குஜிலியம்பாறை அருகே கரிகாலி என்ற இடத்தில் செட்டிநாடு சிமெண்ட் ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள், ரசாயனங்கள் ஏற்றிவரும் டேங்கர் லாரிகள் வந்து செல்லும்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் ரசாயனக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்றை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் ஓட்டிவந்துள்ளார். அந்த இடத்தில் லாரி சாலையோரமாக நிறுத்தப்பட்டபோது திடீரென தீப்பற்றிக்கொண்டு எரிந்துள்ளது. தகவலறிந்த குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் லாரி முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிமெண்ட் ஆலைக்கு வந்து செல்லும் வாகனங்களால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் விபத்து ஏற்படுமோ என அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகிறார்கள். மேலும் சிமெண்ட் ஆலையில் இருந்து ரசாயன கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அந்த லாரி ஏற்றி வந்ததால்தான் தீப்பற்றிக் கொள்ள காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிமெண்ட் ஆலையில் இருந்து வரும் வாகனங்கள், பாதுகாப்புடன் செயல்படவும் பொது மக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையிலும் சிமெண்ட் ஆலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்! இதையும் படியுங்க: நொய்டாவில் தீ விபத்து: அணைக்கும் பணிகள் தீவிரம்!