திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,451 கூட்டுறவு வங்கிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. மேலும், கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. முன்னாள் அதிமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் அவசரகதியில் 110 விதியின்கீழ் விவசாய நகைக் கடன் தள்ளுபடி என அறிவித்திருந்தனர்.
ஒன்லி கணினி, நோ ஆன்லைன்
அதேபோல் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வங்கிகள் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறியிருந்தார். ஆனால் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் கணினி மட்டுமே உள்ளது. ஆனால் அவை ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. ஆன்லைனில் இணைத்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் என்ன நடைபெறுகிறது என்று மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குத் தெரியும்.
விஞ்ஞான அமைச்சர்
கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு கடன் தொகை தரப்படுகிறது, எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது கூட ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. இவைகளெல்லாம் தெரியாத விஞ்ஞான ரீதியான முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் பிடிக்காமல் வேலை செய்கிறார் என்று கூறுகிறார்.
ஆனால், கூட்டுறவுத்துறையில் விவசாயக் கடன் தள்ளுபடியில் அனைத்து பகுதிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.