திண்டுக்கல்: கொடைரோடு அருகே பள்ளபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர், பால் வியாபாரி மகாபிரபு (25). இவரும் மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள கல்மேடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (22) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
மகாபிரபு சரியாக வேலைக்குச் செல்லாமல் போதிய வருமானம் இல்லாததால், கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மகாபிரபுக்கு கூடுதலாக குடிப்பழக்கமும் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 24ஆம் தேதியன்று மகாபிரபு குடித்துவிட்டு, தன் காதல் மனைவி அணிந்திருந்த தங்கத் தாலியை கேட்டுள்ளார்.
அதனை அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது தாய் ராமுத்தாய் (45), தம்பி அரவிந்த் குமார் (19) ஆகியோருடன் சேர்ந்து வீட்டின் கதவை அடைத்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரியை அடித்து, உதைத்து அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்தார்.
பெண்ணின் வாக்குமூலம்:
இதனால், அகிலாண்டேஸ்வரி போட்ட கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து தீயை அனைத்து அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.