திண்டுக்கல்:கொடைக்கானல் அருகே தன் மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சந்தேகிக்கப்படும் கணவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு இறந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணின் தற்கொலைக்கு அவரின் கணவர் தான் காரணம் என சந்தேகித்தனர்.
மேலும், காவல் துறையினரிடமும் புகார் அளித்தனர். எனினும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டடனர். அதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவரைக் காவல் துறையினர் இன்று(ஜூன் 30) கைது செய்துள்ளனர்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா(23). இவர் வட்டகானல் பகுதியைச்சேர்ந்த ஆரோக்கிய சாமை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், மூன்று மாத கர்ப்பிணியான மோனிஷா, கடந்த ஜூன் 4அன்று தூக்கிட்டு இறந்து கிடந்ததாக காவல் துறையினரிடம் அவர் கணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன் மகளின் இறப்பில் மருமகனான ஆரோக்கிய சாமை சந்தேகித்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர், அவர் மீது புகார் அளித்ததின் அடிப்படையில், தற்போது ஆரோக்கிய சாமை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இனிமேல் லஞ்சம் கேட்பீங்க' - பட்டா மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ அதிரடி கைது!