தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.பி.யின் தொகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த பாமக! - சட்டப்பேரவைத் தேர்தல்

பாமக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த கவிஞர் திலகபாமா, கொழிச்சாமலை மலைவாழ் மக்களுக்கு ஐந்து வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.

பாமக சார்பில் மலைவாழ் மக்களுக்கு வீடு
பாமக சார்பில் மலைவாழ் மக்களுக்கு வீடு

By

Published : Oct 18, 2021, 10:21 AM IST

திண்டுக்கல்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆத்தூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பிரச்சினை உள்ளது என்பதைக் கண்டறிந்து தான் வெற்றிபெற்றால் கண்டிப்பாக அனைத்தும் நிவர்த்தி செய்துவைப்பதாக உறுதியளித்திருந்தார்.

அதனடிப்படையில்தான் வெற்றி பெறாவிட்டாலும் ஆங்காங்கே உள்ள பிரச்சினைகளைச் சிறிது சிறிதாக பாமக சார்பில் சரி செய்துகொடுத்துவருகிறார். ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆடலுர் அருகே கொழிச்சாமலை மலைவாழ் மக்களின் குடியிருப்புகளுக்குச் சென்று பார்த்தார்.

வீடுகள் திருப்பு விழா

வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படும் அவர்கள் மழையிலும், வெயிலிலும் படும் துன்பங்களைக்கண்டு பாமக சார்பில் கவிஞர் திலகபாமா முதலில் சுப்பிரமணி, பாண்டிய ரெங்கநாதன், வேளாங்கண்ணி, பாலகுரு, உமையகண்ணன் ஆகிய ஐந்து நபர்களுக்கு அழகிய வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அதன் திறப்பு விழா நேற்று (அக். 17) நடைபெற்றது. இது குறித்து மாநில பொருளாளர் திலகபாமா கூறியதாவது, “ஆத்தூர் பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நான் தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது பலர் வீடு இல்லாமல் தவிப்பதை அறிந்தேன். நான் வெற்றிபெற்றால் வீடுகள் கட்டித் தருவதாக வாக்களித்தேன்.

ஆனால் தோல்வியுற்றபோதும் பாமக சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாகச் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஐ. பெரியசாமி, தற்போது அமைச்சராக இருக்கிறார். ஆனால் எந்த நன்மையும் தொகுதிக்குச் செய்யவில்லை. மலைவாழ் மக்கள் வீடில்லாமல் தவிப்பதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அரசுக்குக் கோரிக்கை

காப்பி, மிளகு, பலா, வாழை என அனைத்து வளங்களும் உள்ள மலைப்பகுதியில் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. விவசாயம் உள்ள பகுதியில் அமைச்சர் அவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

நான் பிறந்த மண்ணிற்குத் தொடர்ந்து என்னால் முடிந்த அளவிற்கு பாமக சார்பில் அனைத்து உதவிகளையும் செய்துதருவேன். தமிழ்நாடு அரசு, மலைவாழ் மலைவாழ் மக்கள் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு உள்பட அத்தனை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பாமக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

ABOUT THE AUTHOR

...view details