திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்ஸர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவரது மனைவி பவானி மகப்பேறு மருத்துவர். கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பவானி கணேசன் என்ற பெயரில் கிளினிக் ஒன்றினை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு மருத்துவரான பவானி இறந்துவிட்டார். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சித்ரா பிரியதர்ஷினி என்பவர் இறந்து போன மருத்துவர் பவானி பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டு தற்போது இந்த மருத்துவமனையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், சித்ரா பிரியதர்ஷினி இதே மருத்துவமனையின் உன்மையான உரிமையாளரான மகப்பேறு மருத்துவர் பவானியிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்ததாகவும் மகப்பேறு மருத்துவர் பவானி இறந்தபிறகு அவரது பெயரை தன் பெயராக மாற்றிய சித்ரா பிரியதர்ஷினி, தவறான முறையில் கர்ப்பமாகும் பெண்கள் கருவை கலைப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறைக்கு சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பூமிநாதன், நகர் நல அலுவலர் முத்துக்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அதிரடியாக சம்மந்தப்பட அந்த கிளினிக்கினை ஆய்வு செய்தனர்.