திண்டுக்கல்: ஆடி மாதம் வந்துவிட்டாலே கடைகள், வணிக வளாகங்களில் ஆடித் தள்ளுபடி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். ஏன் என்றால் ஆடி மாதம் என்றாலே மக்கள் அனைவருக்கும் மனதில் தோன்றுவது தள்ளுபடி விற்பனையே. பொதுவாக ஆடிமாதங்களில் திருமணம் போன்ற எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இதன் காரணமாக ஜவுளி, தங்க நகைகள், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை மந்தமாகி தேக்கநிலை ஏற்படும்.
தேங்கிய பொருட்களை விற்பனை செய்யவும், தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விற்பனை செய்ய தேவையான புதிய ரகங்களின் முதலுக்கான நிதியை திரட்டுவதற்காகவும் வியாபார நிறுவனங்கள் தொடங்கியதே இந்த தள்ளுபடி விற்பனை.இப்படிப்பட்ட சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பல் மருத்துவமனை ஆடி தள்ளுபடியை அறிவித்து போஸ்டர் அடித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் பல் எடுப்பதற்கு 149 ரூபாய் பல் சொத்தை அடைத்தலுக்கு 149 ரூபாய் என்றும் இது சாமானிய மக்களுக்கான சேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறை ஊழியர்களுக்கு சிறப்புச் சலுகை என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆடிமாதத்தில் மக்களை கவர்வதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியூகங்களைக் கையில் எடுப்பார்கள், ஆனால் தனியார் மருத்துவமனை எடுத்துள்ள இந்த செயல், வடிவேலு பட பாணியில் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் ஏராளமான மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் வாடிக்கையாளர்கள் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஃபரை வழங்கி ஆடித் தள்ளுபடி எனக்கூறி வாடிக்கையாளர்களை மருத்துவமனை நிர்வாகங்கள் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும் ஜவுளி கடைக்கு மட்டும் ஆடித் தள்ளுபடி விளம்பரம் இல்லை அனைத்துக்கும் விளம்பரம் உண்டு என்பதை திண்டுக்கல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் காட்டி உள்ளது.
இதையும் படிங்க :தீபாவளிக்கு தயாராகும் ஆவின் பலகாரங்கள்... அமைச்சர் தந்த தகவல்..