திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியபோது, "மாநில அரசு கொண்டுவந்த 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை வரவேற்கிறோம்.
பொதுத்தேர்வு என்றால் மாணவர்கள் தற்கொலைசெய்வது இயல்பு; அதற்காகத் தேர்வை நிறுத்த முடியாது. தடுப்பதற்கான வழிகளைத்தான் பார்க்க வேண்டும். கல்வி உரிமைகள் குறித்து பேசுபவர்கள் கல்விக் களத்தை போர்க்களமாக மாற்றிவருகின்றனர்.
அதே சமயத்தில் அரசு பல சலுகைகள் மாணவர்களுக்கு செய்துகொடுத்தும் மாணவர்கள் படிப்பதில்லை. 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை கம்யூனிஸ்ட்டுகள், திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்துவிடக் கூடாது என்று எதிர்க்கின்றனர்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி பெரியார் கூறினார், 'எனக்குப் படித்தவர்கள் தேவையில்லை, முட்டாள்கள்தான் தேவை' என்று. அதேபோன்றுதான் திமுகவினர் மாணவர்கள் படிக்கக் கூடாது உதயநிதிக்கு கொடி பிடிக்க வேண்டும், சுவரொட்டி ஒட்ட வேண்டும் என நினைக்கின்றனர்.
படித்தவர்கள் யாரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். விவசாயியான எடப்பாடி பழனிசாமி தனது உழைப்பால் முதலமைச்சரானதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்வு என்று வந்தால் இரண்டு பெண்கள் தற்கொலை-செய்துகொள்வது வழக்கம் என்று சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.