திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, “பழனி மலைக்கோயிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம் என்றும், தமிழ்நாடு அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்பது மத சார்புடையதுதான். இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்ய வேண்டும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
உதாரணமாக, பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பல மாடுகளை கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்புவதாக குற்றம் சாட்டினார். பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தில் சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர் பாபு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோயில்கள் அரசுக்குச் சொந்தமானது அல்ல என்றும், அது இந்து மக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார். மேலும், பழனி கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சம்பவம் போன்று வரும் காலங்களில் பழனி கோயிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.