திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற விவசாயி ஆடு மேய்த்துகொண்டிருந்தார். அப்போது, பயங்கர சத்தத்துடன் வந்த துப்பாக்கி குண்டு அவர் உடலில் பாய்ந்தது.
இதில், படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விவசாயி சுந்தரமூர்த்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடந்தது குறித்து மூன்றாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். மேலும், காட்டுப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததா? அல்லது காட்டு மிருகங்களை வேட்டையாடும் கும்பல்களால் தவறுதலாக சுடப்பட்டதா? என வனத்துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி மீது துப்பாக்கி சூடு சாணார்பட்டியில் விவசாயி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.