இதுக்கு மேல பஸ் போகாது என சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொல்லும் பேருந்து ஓட்டுநர் திண்டுக்கல்:கொடைக்கானல் கீழ்மலையான பண்ணைக்காடு, தாண்டிக்குடி மங்களம், கொம்பு தடியன் குடிசை, கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி, ஆடலூர், பன்றிமலை போன்ற பகுதிகளுக்கு மக்கள் தேவைக்காக தினந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயத்தையும், விவசாயக் கூலியையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு வத்தலகுண்டு மற்றும் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தினசரி மதியம் 1.30 மணிக்கு புறப்படும் அரசு பேருந்து ஊத்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி, குப்பம்மாள் பட்டி, கேசி பட்டி வழியாக ஆடலூர் பகுதிக்கு மாலை 4.45 மணிக்கு செல்லும்.
மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதே வழியில் வத்தலகுண்டு வந்து சேரும், இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து கிளம்பியுள்ளது. இந்நிலையில் பேருந்துக்காக தடியன் குடிசை பகுதியில் ஆடலூர், கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் காத்திருந்தனர். தடியன் குடிசை வந்த அரசு பேருந்து அங்கிருந்து கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது.
நாங்கள் இப்படியே திரும்பிச் செல்கிறோம் என்று பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் எங்களது பகுதிக்கு வேறு வாகனம் கிடையாது. நீங்கள் பேருந்து தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அதே போல் பேருந்து நடத்துனர் சிகரெட் பிடித்தபடி உங்களது பகுதிக்கு பேருந்து செல்லாது நீங்கள் வேறு வாகனத்தை பிடித்துக் கொண்டு செல்லுங்கள் என்று அசால்டாக கூறியுள்ளார்.
மேலும் இப்பகுதியில் வன விலங்குகளுக்கான யானை மற்றும் காட்டு மாடுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. யானையால் தாக்கி பல விவசாயிகள் இறந்துள்ளனர். அதேபோல் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாங்களும் பல மணி நேரமாக அரசு பேருந்துக்காக காத்திருந்தோம், வேறு பேருந்தும் கிடையாது. தினமும் பயணிகளை இறக்கி விடும் நீங்கள் தான் இறக்கி விட வேண்டும் என கூறியுள்ளனர்.
அப்போது இருவரும் இறக்கி விட முடியாது என்று கூறியதையடுத்து, பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்து பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. மலை கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். மலை கிராமங்களில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதேபோல் அரசு பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடையாது.
இப்படி உள்ள சூழ்நிலையில் அரசு பேருந்தின் ஊழியர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பேருந்துகள் செல்லாது என்று கூறுவது, மது போதையில் இருந்து கொண்டு பேருந்து பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இதுபோன்ற பயணிகளிடம் மிரட்டுவதும் பேருந்துகளை இயக்க முடியாது என்று கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் செல்ல வேண்டும். பயணிகளை பாதிவழியிலேயே யாரும் இறக்கி விடக்கூடாது. அதை மீறி இறக்கிவிட்டு இது போன்று பயணிகளிடம் சண்டையிடும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மலைக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தென்காசியில் கொலை வழக்கில் வெளிவந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது!