திண்டுக்கல் மாநகராட்சி பூ மார்க்கெட் அருகே உள்ள அம்மா உணவகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கப்படும் முறை, வினியோகிக்கப்படும் முறை குறித்து ஆய்வு செய்த அவர் அங்கு தயாரித்த உணவினை வாங்கி அங்கேயே அருந்தினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “விலையேற்றத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 39 வகையான உணவுப் பொருள்கள் 2000 ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் 13 வகையான காய்கறிகள் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருப்பது அவசியம். எனவே இதனை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மளிகை பொருள்கள், நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களில் வாங்கும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்வு செய்யப்படும் பொதுமக்களுக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் பரிசாக இரண்டு பேருக்கு தலா ஒரு பீரோ, மூன்றாவது பரிசாக 3 பேருக்கு குக்கர் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளன. இது மட்டுமன்றி 108 பேருக்கு சேலை வழங்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க...களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!