மணல் கடத்தலை தடுத்த விஏஓ மற்றும் உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கு திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தன் கரடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி மணல் அள்ளி வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.
அந்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரது உதவியாளர் மகுடீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் வேறு ஒரு இடத்திற்கான நடைச்சீட்டைப் பயன்படுத்தி மண் அள்ளியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.
அப்போது காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல, பின்னால் விஏஓ உதவியாளர் சென்று கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பொலிரோ ஜீப்பில் வந்த நான்கு பேர், விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போல வலது புறமும், இடது புறமுமாக சினிமா காட்சிகளில் வருவதுபோல் வாகனத்தை செலுத்தி வழி விடாமல் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கொலை செய்ய மதுபானக் கடை அருகே காத்திருந்த 4 பேரை கைது செய்த போலீசார்!
இதில் விஏஓ நிலை தடுமாறியதையடுத்து, அச்சத்தில் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும் மண் அள்ளிய நபர்கள் லாரிகளை மோதுவதுபோல் சென்றுள்ளனர். மேலும் லாரிகளில் இருந்த மண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த விஏஓ மற்றும் உதவியாளர் மகுடீஸ்வரன் மீது கொட்டியவாறு சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தப்பி ஓடிய நான்கு பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து விஏஓ சங்கத்தினர் இவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், பணி பாதுகாப்பு வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் பாஸ்கரன், பாலசமுத்திரம் திமுக கவுன்சிலர் ரமேஷ், திமுக பிரமுகர் காளிமுத்து மற்றும் அவர்களது தந்தை சக்திவேல் ஆகியோரை 4 நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பிரபல வணிக நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!