திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த வாரம் திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பரமன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அச்சம்பவம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் காவல் துறையினர், பரமன் வீட்டில் சோதனை மேற்கொண்டதில், தற்கொலை செய்வதற்கு முன் பரமன் நான்கு பக்கத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அக்கடித்ததில், "நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். அந்தத் தொழிலில் லாபம் கிடைக்காததால், ஒட்டன்சத்திரம் விஸ்வநாதநகரைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் கிட்டான், அத்திக்கோம்பையைச் சேர்ந்த சதீஸ்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரிடம் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வட்டிக்குப் பணம் வாங்கி, அப்பணத்தை வைத்து வட்டி தொழில் செய்துவந்தேன்.
அதில் 70 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் எனக்கு கடன்கொடுத்த கிட்டான், சதீஸ்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் பணம் கேட்டு தினமும் தொல்லை கொடுத்தனர். என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. நான் வாங்கிய பணத்திற்கு மேல் வட்டி கட்டிவிட்டேன். இருந்தும் என்னை அவர்கள் ஏமாற்றி பணம் கேட்கின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து காவல் துறையினர் கிட்டான், சதீஸ்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில் மார்க்கெட் பைபாஸ் சாலையில் கிட்டான் காவல் துறையினரிடம் சிக்கினார். அதன்பின் அவர் மீது கந்து வட்டி கேட்டு துன்புறுத்தல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் மன உளைச்சல் காரணமாக ஒருவர் தற்கொலை!