திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்துவருகிறது. இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாடு முழுவதுமிலிருந்துவருகை தருவது வழக்கம்.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக தோட்டக்கலைத் துறையின் கட்டுபாட்டில் உள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பூங்காகள் மட்டும் திறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நகராட்சி கட்டுபாட்டில் உள்ள கோக்கர்ஸ் வாக் திறக்கப்பட்டது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி உள்ளவர்கள், சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் எனவும், கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் கோரிக்கையும் விடுத்துவந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற வனக்குழு ஆலோசனைக்கு பிறகு, மூன்றாம் கட்டமாக வனத்துறை கட்டுபாட்டில் உள்ள மோயர் பாயின்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் சுற்றுலா பயணிகள் முகக்கவச,ம் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டுமென வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்!