திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான வெள்ளோடு, நிலக்கோட்டை, செம்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மல்லிகை பூ, முல்லை பூ, கனகாம்பரம், செவ்வந்தி போன்ற பல்வேறு பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த பூக்களை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு, விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரங்களில் பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அதிகமான பனிப்பொழிவின் காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைவாக காணப்படுகிறது.
மேலும், நாளை (ஜன.15) மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால், பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. மேலும், திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, சேலம், கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு பூக்கள் அதிக அளவில் அனுப்பப்படுகிறது.