வடக்கிழக்கு பருவமழை இன்னும் சில நாள்களில் வருவதற்கான வாய்ப்பு உள்ள சூழலில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் தீயணைப்புத் துறை சார்பில் திண்டுக்கல் கோட்டை குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடுபவர்களை ரப்பர் படகில் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்பது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது.
இதில், நீரில் தத்தளிப்பவர்களை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்களுடன் சென்று மீட்டனர். பின்னர் தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள், மயக்க நிலைக்குச் சென்றால் எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இதில் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் 30 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஒத்திகை குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா கூறியதாவது: இனி வரும் நாட்களில் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வாரந்தோறும் பேரிடர் காலங்களில் தீயணைப்பு வீரர்கள் எப்படி பாதுகாப்பாக ஆபத்தில் உள்ளவர்களை மீட்பது என்று செயல்முறை விளக்கமாக செய்து காட்டப்படும்.
ஒத்திகையில் எதிர்பாராத சூழலில் மீட்புப் பணியில் கிடைக்கும் ரப்பர் டியூப், தண்ணீர் கேன்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி எவ்வாறு துரிதமாக மீட்கலாம் என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது என்று கூறினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம்