திண்டுக்கல்: மதுரை முதல் நத்தம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை ஐவிஎல்ஆர் என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் நத்தம் அருகே லிங்கவாடி மலைப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்திலிருந்து மணல் எடுக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து மணல் அள்ளுவதால் தங்களது விவசாய நிலங்கள், மற்றும் இயற்கை வளம் பாதிப்படைவதாகவும், சில நபர்கள் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி மணல்களை எடுக்க அனுமதிப்பதால் அருகே உள்ள தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐவிஎல்ஆர் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் மூலம் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி டிப்பர் லாரி, பொக்லைன், ஹிட்டாச்சி வாகனம் உள்ளிட்ட மூன்று வாகனங்களை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிறை பிடித்து வாகனங்களை ஓட்டி வந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.