மதுரையிலிருந்து பொள்ளாச்சி செல்வதற்கான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சாலை அமைப்பதற்காக ஒட்டன்சத்திரம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நிலங்கள் சந்தை மதிப்பைவிட குறைவாக உள்ளதால் முறையான இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதில் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு செய்தனர்.
இந்தப் பெருந்திரள் முறையீட்டை திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி தொடங்கிவைத்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பேட்டி இது தொடர்பாக திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி கூறுகையில், ”வேளாண் விளை நிலங்களை சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இம்முறை பெறப்படும் விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் பாரபட்சமாக தமிழ்நாடு அரசு நடந்து கொள்கிறது.
ஏனெனில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் விவசாய நிலங்களை அரசு சாலை அமைக்க கேட்கும்போது அதை விட பத்து மடங்கு அதிக தொகையை கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான தொழிலை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால் ஒட்டன்சத்திரம், பழனி பகுதி விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நிலங்கள் சதுர அடிக்கு ஆறு ரூபாய் என நிர்ணயித்திருப்பது மிகவும் கொடுமையானது. இன்றைய நிலையில் ஒரு டீயின் விலை பத்து ரூபாய். ஆனால் வீடு, கிணறு, மரங்கள், விவசாய நிலம் என அத்தனையையும் இழந்து வேறு ஒரு இடத்துக்கு செல்லச் சொல்லும்போது அரசு இந்த அத்தனைக்கும் சேர்த்து மதிப்பிட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால் அரசு முறையான இழப்பீடு வழங்காமல் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்திவருகிறது. இதேபோல உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து பெறப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும்போது ஏன் பழனி ஒட்டன்சத்திரம் விவசாயிகளிடம் மட்டும் அடி மாட்டு விலைக்கு கேட்கின்றனர்.
எனவே அரசு விவசாயிகளுக்கு சந்தை மதிப்பிலிருந்து நான்கு மடங்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். அவர் இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: