விளைநிலங்களைச் சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் கவலை
திண்டுக்கல்: கொடைக்கானல் மலை கிராமமான குறிஞ்சி நகர் பகுதியில் விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தியதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்பகுதிக்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக மலைகிராமங்களில் தொடர்ந்து யானைகள் அட்டாகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
கொடைக்கானல் அருகேயுள்ள புலியூர், பேத்துபாறை, அஞ்சு வீடு பகுதிகளில் யானைகள் முகாமிட்டு விவசாயிகளை அச்சமடைய செய்துவருகிறது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 29) கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியில் உள்ள விளைநிலத்தில் யானைகள் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, அவக்கோடா, உருளைக்கிழங்கு போன்றவற்றை சேதப்படுத்தியும் பாதுகாப்பு வேலிகளை உடைத்து எறிந்து பயிர்களையும் சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் வனத் துறையினர் யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விளைநிலத்தின் உரிமையாளர் ரவீந்திரன் கூறியதாவது, "யானை தொடர்ந்து நகர் பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. விவசாய நிலத்தை சேதப்படுத்தி வரும் நிலையில், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன் யானை அட்டகாசத்தை போக்க அரசும் வனத் துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.