திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகமாக யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. கொடைக்கானலில் குடிசைத் தொழிலாக யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆயில் தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல் வலிகளுக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. நாள்தோறும் தினசரி 100 லிட்டர் ஆயில் தயார் செய்வதே சிரமம்தான்.
யூகலிப்டஸ் ஆயில் தயாரிக்கும் முறை
யூகலிப்டஸ் மரத்திலிருந்து உதிரும் இலைகளை சேமித்து வைத்து பெரிய கொதிகலன் மூலம் யூகலிப்டஸ் ஆயிலை தயாரித்து வருகின்றனர். சுமார் 400 கிலோ இலைகள் பிடிக்கும் ஒரு தொட்டியினுள் இலைகளை நிரப்பி காற்று புகாமல் மூடி வைக்கப்படும். தொட்டியின் அடிப்பகுதியில் தீயிட்டு இலைகள் வேகவைக்கப்படுகிறது. தொட்டியிலிருந்து வரக்கூடிய ஆவியானது ஒரு குழாய் மூலம் மற்றொரு தொட்டிக்கு செல்கிறது.
அவ்வாறு செல்லக்கூடிய ஆவி அதிக வெப்பமாக இருப்பதால் இன்னொரு குழாய் மூலம் குளிர்ந்த நீரையும் சேர்த்து சிறிய தொட்டிக்கு செல்கிறது. இறுதியாக நீரின் கடின தன்மை காரணமாக நீர் மட்டும் அடிப்பகுதியில் தேங்கி நிற்கும். அதே நேரம் யூகலிப்டஸ் இலையின் ஆவி நீரானது மேல்பகுதியில் நின்று அந்த ஆவி நீர் மட்டும் தனியாக யூகலிப்டஸ் தைலமாக பிரிக்கப்படுகிறது.