திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை வனப்பகுதியில் பல 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியை சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை விநோத எறும்புகள் பரவியிருந்தது.
இது நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவியது. தற்போது கடந்த சில நாட்களாக அது சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த விநோத வகை எறும்புகள் வனப்பகுதிக்கு சென்றவுடன் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இந்த எறும்புகள் கண்களை மட்டுமே கடிப்பதாக கூறப்படுகிறது. இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் பாதித்ததாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதன் எதிரொலியாக பெங்களூரிலிருந்து விஞ்ஞானிகளின் & ஆராய்ச்சி மாணவர்கள் வேலாயுதம்பட்டியில் 2 தினங்களாக நேரில் வந்து காப்புக்காடு மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களில் ஆய்வை பற்றி அறிக்கை அளித்துள்ளனர்.
மக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வருவதாலும், சிலர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதாலும் பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவை மிகவும் ஆபத்தானவை மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) படி, அவை உலகின் முதல் 100 ஆபத்தான உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.