திண்டுக்கல்:சின்னாளப்பட்டி அடுத்துள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த பவள விழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா இன்று(நவ.11) நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதன் பின் பேசிய பிரதமர் மோடி, 'வணக்கம்...!, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது ஊக்கம் அளிக்கிறது. சுதேசி இயக்கத்தின் மையப்புள்ளியாக இருந்தது, தமிழ்நாடு.
காந்தி கூறியபடி சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது. ஒன்றுபட்ட சுதந்திரமான இந்தியாவுக்காக பாடுபட்டவர், மகாத்மா காந்தி. காந்தியின் முக்கியக்குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான். கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
விவேகானந்தருக்கு வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி, தமிழ்நாடு. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்குக் காரணம்.
கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சங்க கால உணவுப்பொருள்களை மீண்டும் மக்கள் விளைவிக்க வேண்டும். இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின் சக்தி பயன்பாடு 24 விழுக்காடு அதிகரித்துள்ளது" எனப் பிரதமர் மோடி பேசினார்.