திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக வேட்பளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர்
அப்போது பேசிய அவர், "திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர். அவரால் நாட்டுக்கு இரண்டு உண்மை வெளிவந்தது. முதலாவது உண்மை, ‘அம்மா இட்லி சாப்பிட்டார்கள். அம்மா சட்னி சாப்பிட்டார்கள்’ என்று சொன்னதெல்லாம் பொய் என்பதை அவர்தான் நாட்டிற்கு அம்பலப்படுத்தினார். 'நாங்கள் பொய் சொன்னோம்' என்று பொதுக் கூட்டத்திலேயே அவர் ஒத்துக்கொண்டார்.
இரண்டாவது உண்மை, 'சசிகலா குடும்பம் அம்மாவைப் பயன்படுத்தி கோடி கோடியாகக் கொள்ளை அடித்துவிட்டது' என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இந்த இரண்டு உண்மையைச் சொன்னதற்காக அவரை நாம் பாராட்டலாம். மற்றபடி இந்தத் தொகுதிக்கும், இந்த மாவட்டத்திற்கும் அவரால் எந்தப் பயனும் இல்லை. இந்த திண்டுக்கல் மாவட்டத்திற்கு எதையும் செய்யாத சீனிவாசனாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் இந்த அமைச்சர்.
தோல்வி பயத்தில் முதலமைச்சர்
முதலமைச்சர் பழனிசாமிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இப்போது ஊடகங்களில் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தப்பித்தவறிக்கூட அதிமுக ஒரு இடத்தில்கூட வந்துவிடக் கூடாது. இது ஆசை அல்ல; அது ஆபத்து. ஒரு அதிமுக எம்எல்ஏ வெற்றிபெற்றால்கூட அவர் அதிமுக எம்எல்ஏவாக அல்லாமல் பாஜக எம்எல்ஏவாகத் தான் செயல்படுவார். அதற்கு உதாரணம், ஓபிஎஸ் மகன்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேசுவதா
தாராபுரம் வந்த பிரதமர் மோடி அங்கு வந்து வெறும் பொய்யைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தாராபுரம் பக்கத்தில்தான் இருக்கிறது பொள்ளாச்சி. அந்தப் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அவருக்குத் தெரியாதா? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறை. அந்தக் காவல் துறையில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அவர் வேறு யாரும் அல்ல, அதே காவல் துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிறப்பு டிஜிபி.