திண்டுக்கல்:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (பிப்.11) நடைபெற்றது. திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடுவுக்குள் நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன் வந்துள்ளது. ஒன்பது மாத கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. மக்கள் ஆதரவு இல்லாமல் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாது என்பதை திமுக தலைமை புரிந்து கொள்ளவில்லை.
முகவர் மூலம் திட்டம் வகுத்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்றைக்கு கட்சி என்ற நிலையை கடந்து பெரு நிறுவனமாக மாறிவிட்டது.
அரசியலை வியாபாரமாக்கிவிட்டது திமுக!
அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூடிய உள்ளாட்சி பிரதிநிதிகளாக உயர்வதற்கு கூட கட்சிக்காக உழைத்த திமுக தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களிலிருந்து கோடீஸ்வர்களை வரவழைத்து போட்டியிட வைத்து, அரசியலை வியாபாரமாக மாற்றிவிட்டது திமுக.