திண்டுக்கல்:தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை குறிவைத்து சோதனையில் இறங்கும் அமலாக்கத்துறை. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை கைப்பற்றியதாகத் தெரிவித்த அமலாக்கத்துறை, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியங்களை வலுப்படுத்த அவரின் சுற்றுவட்டாரங்களில் சோதனையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர், வீரா. சாமிநாதன். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களிலில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் மற்றும் பழனியில் தனியாக சிபிஎஸ்சி பள்ளியும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர் என்று சந்தேகத்துக்கு உட்பட்டு, இவரது வீட்டில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!
குறிப்பாக வீரா. சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமியாக செயல்பட்டு வந்தார் என புகார் எழுந்த நிலையில் அதன் அடிப்படையில் தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் மூலம் வசூலான பணத்தை, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கொடுத்ததாக இவரின் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலே தற்போது இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.