திண்டுக்கல்:தொழிலதிபர் தொழிலதிபர் ரத்தினம் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் தொழிலதிபராக இருக்கும் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று (செ.12) காலை 9 மணி முதல் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று (செப். 12) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள பிரபல தொழிலதிபரான ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
மேலும், ரத்தினம் தமிழ்நாடு முழுவதும் மணல் அள்ளுதல், சில்லறை விற்பனை செய்தல், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்றல் போன்ற தொழில்களையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பு இழப்பீடு செய்த போது, தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்ததாக கூறி ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.
அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மைத்துனர் கோவிந்தன் சொந்தமாக 3 பெட்ரோல் பங்குகள், மணல் குவாரி, ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ரெய்டு நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் (CRPF) போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (செப். 12) இரவு 11 மணி அளவில் கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து 2வது நாளாக (செப்.13) இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. ரத்தினத்தின் மூத்த மகன் துரை மற்றும் அவருடைய மனைவி, இளைய மகன் வெங்கடேஷ், ரத்தினத்தின் மனைவி ஆகியோர் அமலாக்கத்துறை வசம் உள்ள நிலையில், ரத்தினம் மட்டும் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை..!