திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவாகரத்தில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியை 3 நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி கோரி கடந்த டிச.8 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை, தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்த மனு கடந்த டிச.12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி காவல்துறை பாதுகாப்புடன் திண்டுக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் அனுராதா வாதிட்டார்
காவல்துறை காவல் வழங்கக் கூடாது என அங்கித் திவாரி சார்பில், வழக்கறிஞர் செல்வம் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டிச.14 ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல்துறை காவல் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் காவல்துறை காவல் முடிந்து இன்று மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை ஆஜர்படுத்தினர்.