திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளுக்கு பிரபலமானது. இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ஆண்களுக்கான ஆயத்த ஆடைகளும் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆயத்த ஆடை தொழிலில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். அதேபோல் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது.
ஆண்களுக்கான ஒரு சட்டை தயாரிக்க கட்டிங் மாஸ்டர், செக்கிங் மாஸ்டர், அயர்னிங் மாஸ்டர், தையல் தொழிலாளி, பட்டன் வைப்பவர் என 13 பேர் வரை வேலை செய்கிறார்கள். காட்டன், நைலான், டெரிகாட்டன் என பலவகையான சட்டைகள் 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலான விலையில் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
இங்கு தயாராகும் ஆடைகள் கேரளா உட்பட தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இம்முறை பொருளாதார மந்தநிலை காரணமாக, தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையிலும் கூட இதுவரை எந்த ஒரு ஆர்டரும் வரவில்லை என்கின்றனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்கள்.