திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கிராம மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காகித ரூபாய் நோட்டுகளைக் காலிக்குடங்களில் ஒட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னை - காலிக்குடங்களில் காகித ரூபாய் நோட்டுகள் ஒட்டி போராடிய மக்கள்!
திண்டுக்கல்: விலைக்கு நீர் வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையில் காலிக்குடங்களில் காகித ரூபாய் நோட்டுகளை ஒட்டி காவடி போல் எடுத்துவந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்குள்ள அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட உலகம்பட்டி பிரிவு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. தற்போது குடிநீர் மட்டுமின்றி, வீட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் நீரைக்கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பலமுறை அகரம் பேரூராட்சியில் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களுடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இணைந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.