இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வருகின்ற குடியரசு தினத்தன்று மாதிரி சட்டமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து பேசிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ், ”இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக ஆளும் மத்திய அரசு சார்பில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் செயல்பட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்த பாஜக தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நம் நாட்டின் மதசார்பின்மையை சிதைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் சொந்த நாட்டு மக்கள் அகதிகளாக, இரண்டாம் தர குடிமக்களாக மதத்தின் பெயரால் பிரித்தாளுவதற்காக கொண்டுவரப்படுகிறது. இந்த சட்டத்திற்கு எதிராகவும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் குரலை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுகிறது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ் பேட்டி பஞ்சாப் மற்றும் கேரளா சட்டமன்றங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் இந்த சட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசோ மோடி அரசின் கொள்கையை ஆதரிக்கும் விதமாக செயல்படுகிறது. மேலும், இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது என்று கூறி மக்களை ஏமாற்றிவருகிறது. உண்மையில் அதிமுகவிற்கு மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதிமுக அரசு அதை ஏற்க மறுக்கிறது. எனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ‘பொன். ராதாகிருஷ்ணனுக்கு மனநிலை சரியில்லை’