திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த மின் கம்பி வடங்கள் இதனால், மேல்மலைப் பகுதிகளுக்கு வனப்பகுதிகளின் வழியாக செல்லும் மின் கம்பி வடங்கள் அறுந்து, எட்டிற்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இடைவிடாது காற்று வீசி வருவதால் மின் இணைப்பை சீர் செய்வதிலும் சிக்கல் நிலவி வருகிறது.
மேலும், மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு வனப்பகுதி வழியே செல்லும் மின் கம்பிகள், மரங்கள் விழுந்து அறுந்து போகும் நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையைப் போக்க கொடைக்கானல் நகரத்திற்கு உயர் கோபுரம் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதைப் போல், மேல்மலை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.