தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெங்காயத்திற்கு போட்டியான முருங்கை: ஒரு கிலோ ரூ.260க்கு விற்பனை - ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து குறைவால் ஒரு முருங்கைக்காய் விலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிலோ முருங்கைக்காய் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

காய்கறி விலை நிலவரம்
முருங்கை விலை ஏற்றம்

By

Published : Nov 27, 2019, 9:58 AM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு தரம் பிரித்து பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக முருங்கை விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தற்போது முருங்கை விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே முருங்கை வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு அருகாமையில் உள்ள கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 2 டன் முருங்கை மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதனால் வியாபாரிகள் விற்பனைக்காக முருங்கை இல்லாமல், வெளி மாநிலங்களான மும்பையிலிருந்து இங்கு விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இதன்காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு முருங்கை விலை 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கையின் விலை 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு முருங்கைக்காய் 20 ரூபாய்க்கு விற்பனையானது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை ஏற்றம்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தொடர்ச்சியாக 200 டன் வரை முருங்கைக்காய் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது உள்ளூரில் இருந்து 2 டன்னும், வெளிமாநிலத்தில் இருந்து 3 டன் முருங்கை மட்டுமே வந்தது இதுவே முதல்முறை என அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், மழைக்காலம் முடிந்து உள்ளூர் முருங்கை வரத்து இருந்தால் மட்டுமே முருங்கை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே வெங்காயத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது அதற்கு போட்டியாக முருங்கை விலையும் ஏற்றம் காண்டிருப்பது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details