தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் உற்பத்தி தீவிரம் - ஆர்டர்கள் குவிந்ததால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி - தீபாவளி புத்தாடைகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள் உற்பத்தி செய்ய ஆர்டர்கள் குவிந்ததால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் உற்பத்தி தீவிரம்
தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் உற்பத்தி தீவிரம்

By

Published : Oct 21, 2021, 6:18 PM IST

Updated : Oct 21, 2021, 6:58 PM IST

திண்டுக்கல்:தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலகாரம், புத்தாடை, பட்டாசுகள் தான். தீபாவளி பண்டிகையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அதிலும் தீபாவளி நெருங்கும் வேலையில் புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள திரள்வார்கள். இதனால் கடைத்தெருக்களில் கூட்டம் அலைமோதும்.

அனைவரின் எதிர்பார்ப்புகள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் தொழில் நடைபெற்றாலும், தீபாவளி பண்டிகையை மட்டும், உற்பத்தியாளர்கள் பிரதானமாக எதிர்பார்க்கின்றனர்.

நத்தம் பகுதியில் சுமார் 300 உற்பத்தியாளர்கள் உள்ள நிலையில், நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இத்தொழில் அமைந்துள்ளது.

உற்பத்தியாளர்களின் சிரமம்

இங்கு, இரண்டு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பாலிஸ்டர், காட்டன், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன் ஆகிய ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் தாக்கம் காரணமாக ஆர்டர்கள் குறைந்ததால், தொழில் முடங்கியது. மேலும் காரோனா ஊரடங்கால் சில மாதங்கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் உற்பத்தி தீவிரம்

பணிகள் தீவிரம்

ஆனால் தற்போது கரோனா பதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கம்போல் தீபாவளி பண்டிகைக்காக, வெளி மாவட்டங்களில் இருந்து துணிகள் உற்பத்தி செய்ய ஆர்டர்கள் குவிய தொடங்கியுள்ளது.

இதனையடுத்து ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீபாவளிக்கு சில நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதால், உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காவலர் நினைவு தினம்- வீரவணக்கம் செலுத்திய ஸ்டாலின்!

Last Updated : Oct 21, 2021, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details