திண்டுக்கல்: கழிவுகளையும் கலையாக மாற்றும் முறை குறித்து ஓவிய ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார்.
கல்லிலே கலை வண்ணம் கண்ட பல்லவ மன்னர்கள் வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், போன்ற பல்வேறு கலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களாக விளங்கிவருகின்றனர்.
அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிவக்குமார் என்பவர் குப்பைக் கழிவுகளையும், பாட்டில்களையும், கலைப் பொருள்களாக மாற்றி கிராம மக்களின் பாராட்டைப் பெற்றுவருகின்றார். நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைபள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக சிவக்குமார் பணியாற்றிவருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளியில் ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். தற்போது சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2012ஆம் ஆண்டு முதல் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். தனது வருமானத்திற்கு குறையிருந்தாலும் வண்ணம் தீட்டுவதில் குறை இல்லை என்பதற்குச் சான்றாக அவரது படைப்புகள் உள்ளன.
இவரின் கைவண்ணத்தில் சிறிய பாட்டிலுக்குள் ஓவியம், முட்டை ஓட்டினுள் ஓவியம், முள்களில் ஓவியம் போன்றவை காண்போரை பிரமிப்படையச் செய்கிறது. அதிலும் முட்டை ஓட்டின் உள்பகுதியில் ஓவியங்களைத் தீட்டி அதனுள் சிறிய அளவில் மின்சார விளக்கு பொருத்தி பளிச்சிடச் செய்துள்ளார்.
இதனை மற்றவர்களுக்குப் பரிசுப் பொருள்களாக தரும் வகையில் அழகுப்படுத்தியுள்ளார். மேலும் தேங்காய் மட்டை நார்களில் பல்வேறு விலங்குகளின் உருவங்களை உருவாக்கி அலங்காரப் பொருளாக மாற்றுகிறார். தொடர்ந்து தனது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இது குறித்த பயிற்சியும் வழங்கிவருகிறார்.
இதையும் படிங்க: பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத கோரிக்கை: ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் போராட்டம்