திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே சித்தரேவு ஊராட்சி அமைதி பூங்காவைச் சேர்ந்தவர், சடையாண்டி. இவரது மனைவி பொன்னுதாயி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
தற்போது சடையாண்டி கூலித்தொழில் செய்துவருகிறார். இதற்கு முன்னதாக தேசிய காடுகள் வளர்ப்புத்திட்டத் தலைவராக இருந்த சடையாண்டி, இரவு நேரத்தில் அமைதிப்பூங்கா பகுதியில் உள்ள வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சடையாண்டி நேற்றிரவு (மே18) வழக்கம்போல வனத்துறை கட்டடத்தில் தூங்கச் சென்றுள்ளார். ஆனால், காலை சடையாண்டி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர். அங்கு சடையாண்டி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில், பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் கொலையாளியைத் தேடி வந்தனர்.