திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'அதிகாரம் என்பது அரக்க குணம் கொண்டது. இரக்கமற்ற மனமும் உடையது. எவ்வளவு போராடினாலும் மக்கள் பிரச்னைக்குத் தீர்வு என்பது கிடையாது. போராடக்கூடிய மக்கள் அவர்களாக நொந்து பின் வாங்கும் வரை அரசு அலுவலர்கள் ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. திமுக அரசின் ஒரு ஆண்டு கால ஆட்சியில் 80 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஒரு ஆண்டு சாதனை என முழு பக்கம் விளம்பரம் மட்டுமே செய்துள்ளனர். ஆனால், எட்டு விழுக்காடு திட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை. மேலும் என்னென்ன திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செய்யப்பட்டு உள்ளது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். சாதனைகள் என்பது மக்களுக்குத் தானாக தெரிய வேண்டுமே தவிர, பொதுக்கூட்டங்களை நடத்தி மேடையில் சாதனை புரிந்ததாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
'இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வேண்டும்': தமிழ்நாடு அரசு தற்போது சாதனை செய்துள்ளதாக விளம்பரங்கள் மட்டும் செய்துவிட்டு, திட்டங்கள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது என விளம்பரத்தை நம்பி மட்டும் ஆட்சி செய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகளுக்கு தமிழ்நாடு அரசால் தற்போது வீடுகள் கட்டி வருகிறார்கள். வீடுகள் கட்டித் தருவதில் மிகப்பெரிய முறைகேடு.
இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் முதலில் சிறப்பு முகாம்களை மூடவேண்டும். கியூ பிராஞ்ச் அமைப்பை தடை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தரவேண்டும். தமிழ்நாடு முழுவதும் கட்டடங்கள் கட்டுவதில் தமிழ்நாடு அரசு தரமான கட்டடங்களை கட்ட வேண்டும். தரமற்ற முறையில் கட்டடம் கட்டுவது பிரயோஜனம் கிடையாது.