திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவை ஒட்டி சசிகலா, அவரது இல்லத்துக்கு வருகை தந்தார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அதிமுக என்பது ஒரு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. தலைவர் கட்சி ஆரம்பிக்கும் போது அது ஏழைகளுக்கான கட்சி என்றுதான் சொல்லி இருந்தார். மக்களும் சரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும் சரி யார் பொதுச்செயலாளர் என்று நினைக்கிறார்களோ நானே வந்து விட்டேன்.
இந்தக் கட்சியின் மூலம் யாருக்கு பேரும் புகழும் வந்திருக்கிறது என்றால் அவர்கள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். அதிமுக பொருத்தவரை தொண்டர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அந்த தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதுதான் உண்மையான முடிவு அதை நோக்கி தான் இந்த இயக்கம் செல்லும்.
நிச்சயமாக வருகிற 2024 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற செய்வேன். எல்லோரையும் ஒன்றிணைத்து செல்வது தான் அம்மாவுக்கும் தலைவருக்கும் செய்கிற கடமையாக இருக்கும். அதை நான் நிச்சயம் செய்வேன். என்னை பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அரசியல் சூழ்நிலைகளையும் சந்தித்து வந்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த பேச்சு திட்டமிட்டு பரப்புவதாக நான் நினைக்கிறேன். இதில் உடனடியாக பெனிபிட் ஆகப்போவது யார் தமிழ்நாட்டு பொருத்தவரைக்கும் திமுகவுக்கு தான் கிடைக்கும். இதன் பின்னணியில் திமுக இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கட்சியிலிருந்து யார் யார் பிரிந்து இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் இணைப்பதுதான் என் வேலையே. அது நிச்சயம் நான் செய்வேன். நல்லபடியாக முடித்து வருகிற 2024 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற செய்வேன்" என்றார்.
அவர் சென்ற பின் ஓபிஎஸ் வந்து மாயத்தேவர் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இரட்டை இலை சின்னத்தை யாராலும் வெல்ல முடியாத அந்த சின்னத்தை அதிமுகவிற்கு தந்தவர் மாயத்தேவர், அதிமுகவில் இடம்பெற்றுள்ள எல்லோரும் மதிக்கக் கூடிய அவர் மறைந்தாலும் அதிமுக தொண்டன் இருக்கும் வரை அவரது நினைவு அனைவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கும்" என்றார். மேலும் வரும் காலங்களில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆராதனா சிவகார்த்திகேயன்!