திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வசித்துவரும் நாகராஜ் என்பவர் தச்சுத் தொழில் (மரவேலைகள்) செய்துவருகிறார். இவர் தன் தந்தையிடமிருந்து இவ்வேலையைக் கற்றுக்கொண்டார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு சுயமாக இத்தொழிலைச் செய்துவருகிறார். தனக்குத் தெரிந்த தச்சுத் தொழிலில் ஏதாவது புதுமையான சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இவரது மனத்தில் பல ஆண்டுகளாக இருந்துள்ளது.
இதுவரை செய்த பொருள்கள்
இதன் வெளிப்பாடாக ஐந்து ஆண்டுக்கு முன்பு ஒரே மரத்தில் கலைநயத்துடன்கூடிய சாமி அறை முகப்பு, வீட்டு வாசல் முகப்பு, மரத்திலான மாலை, பெண்கள் அணியக்கூடிய தோடு, ஜிமிக்கி, கழுத்தில் அணியக்கூடிய சங்கிலி, பெண்கள் இடுப்பில் அணியக்கூடிய ஒட்டியாணம் போன்ற ஆபரணங்கள் ஆகியவற்றைச் செய்வது என முடிவுசெய்தார்.
இதற்காக யாரிடமும் சென்று பயிற்சி எடுக்காமல் தனக்குத் தெரிந்த தொழிலை வைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக இவற்றைச் செய்துவருகிறார். இதனையடுத்து, இவர் ஒரே மரத்தினால் விநாயகர், லட்சுமி, முருகன், வெங்கடாசலபதி போன்ற சாமிகளின் உருவங்கள், பூரண கும்பம், சாமி படங்களுக்குத் தொங்கவிடக்கூடிய மாலை, அலங்காரத்திற்காகத் தொங்கவிடக்கூடிய சங்கிலி போன்றவை செய்துவருகிறார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், எவ்விதமான பசையும் (Gum) கொண்டு ஒட்டாமல் மரத்துண்டுகளின் உதவிகொண்டே செய்துவருகிறார். தற்பொழுது ஏழு அடி உயரத்தில் அ முதல் ஃ வரை எழுத்து கொண்ட மாலை இவர் செய்துவருகிறார்.