தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2020, 1:11 PM IST

Updated : Jun 22, 2020, 10:41 PM IST

ETV Bharat / state

"தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!

திண்டுக்கல்: தற்சார்பு என்பதை வெறும் வாய்ச்சொல்லாக அல்லாமல் தனது விவசாய யுக்தியினால் வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார் மாந்தோப்பு விவசாயி பரளி மலைச்சாமி. தான் மட்டும் பயனடையாமல் தனது கிராம விவசாயிகளின் பயனுக்காகவும் பங்களிக்கும் அவர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

dindugul-mango-farmer
dindugul-mango-farmer

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் பெருமாள்பட்டி கிராமம் அமைந்துள்ளது. எங்குப்பார்த்தாலும் செம்மண் பூமியாக காட்சி அளிக்கும் இக்கிராமத்தில் மாமரத் தோப்புகள்தான் அதிகம் காணப்படுகிறது.

மரங்கள் அடர்ந்த தோப்புக்குள் ஆங்காங்கு வீடுகளையும், அதில் ஆடு மாடு மற்றும் கோழிகளையும் காணலாம். அப்படிப்பட்டயிடத்தில் கூலித் தொழிலாளியை போன்ற தோற்றம். சளைக்காத உழைப்பு. மண்ணையும் இயற்கையையும் மதிக்கின்ற நேசிக்கின்ற பண்பு. எந்த நேரத்தில் எதைச் செய்தாலும் சிறப்புறச் செய்தால் பலன் கிடைக்கும் என்ற மனப்பக்குவம் கொண்டவர்தான் விவசாயி பரளி மலைச்சாமி.

மலைச்சாமி மாமரங்கள் வளர்ப்பில் கைதேர்ந்தவர். ஐந்து ஏக்கரில் மாந்தோப்பு அமைத்து பராமரித்துவரும் அவர், மாந்தோப்பிற்கிடையில் கொய்யா, வாழை, எலுமிச்சை, பப்பாளி, தென்னை உள்ளிட்டவைகளும் நட்டு லாபம் ஈட்டிவருகிறார். நிலத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல, பருவகால சூழலையும் சரியாக கணித்து அதில் எப்படி லாபம் ஈட்டுவது என்பதும் முக்கியம் என்கிறார் அவர் அழுத்தம் திருத்தமாக.

"தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!

இதுகுறித்து அவர், "பொதுவாக எங்கள் பகுதிகளில் மாமரங்களுக்கு நடுவே ஊடுபயிர் விளைக்கும்முறை கிடையாது. ஆனால் விதிவிலக்காக நான் அதனைச் செய்துள்ளளேன்.

எனது ஐந்து ஏக்கர் மாந்தோப்பில் ஊடுபயிராக கொய்யா, வாழை, எலுமிச்சை, பப்பாளி, தென்னை உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளேன். அதில் அமோக விளைச்சலையும் எடுத்துள்ளேன். அதே போல ஏக்கர் ஒன்றுக்கு 40 மாமரங்கள் மட்டுமே விவசாயிகள் நடுவார்கள்.

ஆனால் நான் ஐம்பதிலிருந்து அறுபது மரங்கள் வரை நட்டு அதில் நல்ல லாபத்தையும் ஈட்டி காட்டியுள்ளேன். ஒரு மரம் மற்றொரு மரத்துடன் பொருத்துவதற்கு முப்பதிலிருந்து நாற்பது ஆண்டுகளாகின்றன.

அதில் எனது முறையைப் பின்பற்றினால் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளில் மரங்கள் பொருந்திக்கொள்ளும். வழக்கமான மா சாகுபடியில் தோராயமாக ஒரு ஏக்கர் மாந்தோப்பில் இரண்டாயிரத்து 500 ரூபாயிலிருந்து மூன்று ஆயிரம் ரூபாய்வரை வருமானம் ஈட்டாலாம். ஆனால் ஊடுபயிரைத் விளைத்தால், விவசாயிகள் இரண்டு மடங்கு லாபத்தை பார்த்து விடலாம்" எனத் தெரிவித்தார்.

தினமும் காலையில் எழுந்து தன்னுடைய தோப்பிற்குச் செல்லும் மலைச்சாமி. அனைத்து மரங்களுக்கும், ஊடுபயிர்களுக்கும், கன்றுகளுக்கும் தண்ணீர் பாய்வதை உறுதி செய்துவருகிறார்.

பிவிசி பைப் மூலம் ஒவ்வொரு மரத்திற்கும், ஒரே நேரத்தில் தண்ணீர் பாயும்படி நீர் பாசன முறையைப் பின்பற்றுகிறார். அதனால் தண்ணீரை பெருமளவு மிச்சப்படுத்த முடியும் என்பது அவர் கணக்கு.

வேதி உரங்களை சிறிதளவும், இயற்கை உரங்களை பெரிதளவும் பயன்படுத்தி மகசூல் எடுக்கும் அவர், அதில் புதுப்புது உத்திகளை பயன்படுத்த தவறுவதில்லை. மரம், செடிக் கொடிகளின் மீதான நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை காப்பாற்றி அதன் யுக்திகளையும், முறைகளையும் மிகத்தெளிவாக விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து ஊக்கப்படுத்திவருகிறார்.

அவரைப்பற்றி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா, "என்னைப் போன்ற சிறு விவசாயிகளுக்கு மலைச்சாமியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் பேருதவிபுரிகின்றன. மாந்தோப்பு சாகுபடியில் ஏதாவது சந்தேகம் என்றால் இவரிடம் வந்துவிடுவேன். அவரின் யுக்திகளை எங்களது நிலத்தில் செய்து பார்க்கின்ற போதுதான் அதன் அருமையை உணர முடிகிறது. இதுவரை ஊடுபயிர் முறையை பின்பற்றாத எங்களுக்கு தற்போதுதான் மலைச்சாமி மூலமாக அதன் பயனை அறிந்துகொள்ள முடிந்தது" எனத் தெரிவித்தார்.

50 ஏக்கர் நிலத்தில் பார்க்கின்ற வருமானத்தை ஐந்து ஏக்கரில் ஒவ்வொரு விவசாயி காண வேண்டும் என தன்னுடன் மட்டுமல்லாமல், தனது கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் ஊடுபயிர் சாகுபடி, பாசன முறை, பூச்சிக்கொல்லி உள்ளிட்டைவை குறித்து அறிவுரையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார்.

அந்த வகையில் விவசாயி மலைச்சாமி, தற்சார்பு என்பதை வெறும் வாய்சொல்லாக கருதாமல் வாழ்வியல் வாய்மையாக வாழ்கிறார்.

இதையும் படிங்க:மதுரையின் பெயரை தேர்வுசெய்த நேரு - ஆச்சரியமூட்டும் வரலாற்றுத் தகவல்!

Last Updated : Jun 22, 2020, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details