கிராமப்புற, நகர்ப்புற படித்த இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சுயதொழில் தொடங்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யுஒய்இஜிபி) திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தில் வியாபாரம், சேவை தொழில்களுக்கு 25% அரசு மானியத்துடன் 5 லட்சம்வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும். அதேபோல் உற்பத்தி நிறுவனங்கள் 10 லட்சம்வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதற்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் சிறப்பு பிரிவினரான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04512471609, 0451- 2470893 என்ற அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்