பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி! திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகளை இன்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதில், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண்ணான 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். மேலும் தமிழக அளவிலும், திண்டுக்கல் மாவட்ட அளவிலும் முதலிடமும் பெற்று அசத்தியுள்ளார்.
மேலும் மாணவி நந்தினி எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்துள்ளார். இதுகுறித்து மாணவி நந்தினி கூறுகையில், "பள்ளியின் தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, ஆசிரியர்கள் மரிய சாந்தி, ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்ததாகவும், அவர்கள் அளித்த ஊக்கம் தான் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உந்துதலாக இருந்ததாகவும், தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும், நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார். அம்மா பாலபிரியா குடும்பத்தலைவியாக உள்ளார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற சகோதரரும் உள்ளார். மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்றதால் பள்ளியின் பிற மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு.. ஜூன் 19 முதல் துணைத் தேர்வு!