திண்டுக்கல்: பேகம்பூர் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் 3 வது மாடியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதனால் கட்சி அலுவலகம் உள்ள முகமதிய புரத்தில் சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி துப்பாக்கி ஏந்திய அதிவேக அதிரடிபடை மற்றும் திண்டுக்கல் காவல்துறையினர் உட்பட 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்தில் தேசிய புலனாய்வுத்துறை சோதனை சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தடுப்புகளை மீறி கட்சி அலுவலகம் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்பொழுது தேசிய புலனாய்வு துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மூன்று மணி நேரம் சோதனை முடிந்து அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த போது அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. 3 மணி நேர சோதனைக்கு பின்பு முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ தொடர்புடைய 60 இடங்களில் என்ஐஏ சோதனை