திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அருள் செல்வி என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், பல வருடங்களாக குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாகவும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் செயல்பட்டு வந்த பவானி கணேசன் மருத்துவமனையில் மருத்துவர் பவானியை அணுகியுள்ளனர். அப்போது அருள் செல்வியை பரிசோதித்த மருத்துவர் பவானி கணேசன், அவருக்கு கர்ப்பப்பை சுருங்கியுள்ளதாகவும், இதனால் குழந்தைப் பிறப்பது கடினம் எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தன்னிடம் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் குழந்தையை விற்பனைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு ஏதேனும், சட்டப்பிரச்னைகள் வரும் என பால்ராஜ் பயந்ததாகவும், எந்த பிரச்னை வந்தாலும் தான் பார்த்துக்கொள்வதாகவும் மருத்துவர் பவானி கணேசன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவரின் பேச்சை நம்பிய பால்ராஜ் தம்பதியினர் ரூ.2 லட்சம் கொடுத்து அந்த ஆண் குழந்தையை வாங்கிச் சென்றதாகவும், கடந்த 3 வருடங்களாக தங்களது சொந்த குழந்தை போல், நல்ல முறையில் வளர்ப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சிவக்குமாருக்கு, சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி, வளர்த்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.