பழனி கோயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை விதிகளின் படி இந்து அல்லாதோர் மற்றும் மாற்று மதத்தினர் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.
இந்த சட்டமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன் பழனி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல். இவர் சில நாட்களுக்குச் சென்னையிலிருந்து வந்த தனது உறவினர்கள் சிலரைப் பழனி மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்திற்குச் சென்று உள்ளார்.
அப்போது டிக்கெட் கவுன்டர் அருகே சென்ற போது மாற்று மதத்தினர் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதை அடுத்து பழனியைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர் சாகுல் அதிகாரிகளுடனும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மின் இழுவை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசி மலைக் கோயிலுக்குச் செல்ல முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த அடிவாரம் போலீசார் இந்து அமைப்பினரைச் சமாதானம் செய்தனர். மேலும் மலைக் கோயிலுக்குச் செல்ல வந்த மாற்று மதத்தினரைச் சேர்ந்தவர்களைக் கோயிலுக்குச் செல்ல முடியாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சாகுலுடன் வந்தவர்கள் காரில் ஏறிச் சென்றனர். கும்பாபிசேகத்திற்கு முன் வரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற பதாகை இருந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அந்தப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்சினை காரணமாக மீண்டும் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் மாற்று மதத்தினர் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
பழனி கோயிலின் புனிதம் மற்றும் பாதுகாப்பு கருதி மின் இழுவை ரயில், ரோப் கார் மற்றும் படி வழிப் பாதையில் பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டும் என்றும், இந்து அல்லாதோர் மற்றும் மாற்றுமதத்தினர் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையை உடனடியாக திருக்கோவில் நிர்வாகம் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கை வந்த நிலையில் மீண்டும் பதாகைகள் வைக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஒரே தேதியில் தாத்தா, மகள், பேரன் பிறந்தநாள் - குடும்பத்துடன் கேக் வெட்டி மகிழ்வுப்பகிரல்!