திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் காய்கறிகள் அதிகமாக கேரள மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம், முருங்கைக்காய் உற்பத்தி இல்லாத சீசன் என்பதாலும், அதிகப்படியான வரத்து இல்லாத காரணத்தாலும் அவற்றின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக இரண்டு தினங்களில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதே போல் பல்லாரி வெங்காயத்திற்குத் தட்டுபாடு ஏற்பட்டு, போதிய பல்லாரி வெங்காயம் வரத்து இல்லாத காரணத்தால், ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் இன்னும் விலை ஏறி ரூபாய் 55 முதல் 60க்கு விற்பனையாகிறது.