திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டி, செம்பட்டி பகுதிகளில் சுரபி போன்ற பெயர்களில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி உள்ளிட்டவற்றை நடத்தி வந்தவர் ஜோதி முருகன். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் அமமுக கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இது மட்டுமின்றி, திரைப்படங்களைத் தயாரிப்பது, திரைப்படங்களில் நடிப்பது எனப் பல துறைகளில் செயல்பட்டு வந்தார். மேலும், திரைப்படங்களுக்கு தமது கல்லூரிகளை இலவசமாகப் படப்பிடிப்புக்குக் கொடுத்து அதன் மூலம் படங்களில் சிறு, சிறு வேடங்களிலும் நடித்து வந்தார்.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜோதி முருகன் நடத்தி வரும் நர்சிங் கல்லூரி மாணவிகள், ஜோதி முருகன் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி திண்டுக்கல் - பழனி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், ஜோதி முருகனைக் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், ஜோதி முருகனுக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி காப்பாளர் அர்ச்சனாவை தாடிகொம்பு போலீசார் கைது செய்தனர். ஆனால் ஜோதி முருகன் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால், ஜோதி முருகனைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் ஜோதி முருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதைத்தொடர்ந்து போக்சோ வழக்கில் ஜோதி முருகனைக் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களாக மதுரை மத்தியச் சிறையில் ஜோதி முருகன் இருந்து வந்தார்.
இந்நிலையில் தாடிகொம்பு ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால், இன்று (ஜன.3) சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி கருணாநிதி ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தும், அர்ச்சனாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து; கம்பத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்